தாயின் மீது சந்தேகம் கொண்டு தந்தை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்று விட குழந்தை ஆதரிக்க ஆளின்றி தவித்து வருகின்றது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள் சரவணகுமார்-ஜெயலட்சுமி தம்பதியினர். இரண்டு வருடங்களுக்கு முன்பு இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்த நிலையில் கயல் என்ற 8 மாத குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நிலையில் மனைவி ஜெயலட்சுமி மீது சரவணகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். கடந்த வியாழனன்று மீண்டும் மனைவியுடன் சண்டை யிட்டு தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் ஜெயலட்சுமி தனது குழந்தையை எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று சமாதானம் பேசுவதாக கூறி மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்த சரவணகுமார் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காயம் பட்ட ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஜெயலட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு சரவணகுமாரை தேடிவந்தனர். இந்நிலையில் செங்கமலப்பட்டி கண்மாயில் பதுங்கியிருந்த சரவணகுமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பெற்ற தாயும் மரணமடைந்து விட தந்தை கைதாகி ஜெயிலுக்கு செல்லும் நிலையில் 8 மாத குழந்தையான கயலின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. ஜெயலட்சுமியின் தாயாரோ மகளே போய் விட்டால் அவனது குழந்தை எதற்கு என்று கயலை ஏற்பதற்கு மறுத்துவிட்டார். பசியால் அழுது வந்த குழந்தை ஜெயலட்சுமியின் சகோதரியின் கைக்கு சென்று உணவு கொடுக்க பட்ட நிலையிலும் அதை வாங்க மறுத்து குழந்தை தொடர்ந்து அழுது வந்தது. இதனைத் தொடர்ந்து ஊர்மக்கள் குழந்தையை சரவணகுமாரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.