குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த இளம்பெண்ணும் அவரை காப்பாற்ற சென்ற கணவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காளியாங்குப்பம் பகுதியில் புருசோத்தமன் என்ற லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரித்திகா, அனுஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான புருசோத்தமன் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கலைவாணி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து படுகாயமடைந்த கலைவாணியை புருஷோத்தமன் காப்பாற்ற முயற்சி செய்தபோது அவர் மீதும் தீ பற்றிக்கொண்டது. அதன்பின் அருகிலிருந்தவர்கள் கணவன் மனைவி இருவரையும் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.