அபுதாபியில் தம்பதிகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கேரளாவைச் சேர்ந்த பட்டெரி-மினிஜா தம்பதியினர் கடந்த 18 வருடங்களாக அபுதாபியில் மிகவும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களது குடியிருப்பில் சடலமாககண்டெடுக்க பட்டுள்ளனர். இதுகுறித்து சக நண்பர்கள் கூறியபோது “கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இந்த தம்பதியினர் மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் பட்டெரியின் பணியை இழக்கும் சூழல் நேர்ந்தது. ஆனாலும் இத்தம்பதிகள் அமைதியாகவே இருந்தனர்.
இருவரும் சண்டை போட்டது போலவோ, அல்லது ஏதேனும் பிரச்சினைகள் இருப்பது போன்றும் தெரியவில்லை. வேலை பறி போனதன் காரணமாக இவர்கள் வைத்திருந்த காரையும் விற்றுவிட்டனர். இதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இவர்களின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என கூறியுள்ளனர். தம்பதியின் ஒரே மகன் அபுதாபியில் பள்ளிப் படிப்பை முடித்து தற்போது பெங்களூரில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த நான்கு தினங்களாக தனது பெற்றோருக்கு மகன் தொலைபேசியில்அழைக்க எந்த பதிலும் இல்லாமல் இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அருகில் இருப்பவர்களுக்கு போன் செய்தபோது அவர்கள் பராமரிப்பாளரிடம் கேட்டு சில நாட்களாக அவர்களைப் பார்க்கவே இல்லை என்ற பதில் கிடைத்துள்ளது. அதன்பிறகு மகன் அபுதாபி போலீசில் புகார் கொடுக்க அவர்கள் குடியிருப்பிற்கு வந்த சமயம் இருவரும் சடலமாக கிடப்பதை கண்டுள்ளனர். மரணம் அடைந்தவர்களுக்கு தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் சொந்த ஊருக்கு இவர்களது சடலங்கள் அனுப்பி வைக்க சமூக சேவகர் ஒருவர் உதவி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.