இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆதிபட்டியில் உள்ள சாஸ்தா கோவில் தெருவில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகள் முன்பு ஜெயப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அருண்பாண்டியன் போடியில் உள்ள செல்போன் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா இருவரும் ஆதிபட்டியில் இருந்து போடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தேனி-போடி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இவர்களுக்கு முன்னால் சென்ற அரசு பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால் அருண்பாண்டியனும் பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனத்தை நிறுத்திய நிலையில் இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அருண்பாண்டியனின் இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் அருண்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் அவரது மனைவி ஜெயப்பிரியா படுகாயங்களுடன் தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஜெயப்பிரியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான திண்டுக்கல்லை சேர்ந்த காளிமுத்து மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.