நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செந்தில்குமார்(41) என்பவர் அவரது மனைவி சங்கீதா(36) மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆம்னி வேன் டிரைவரான செந்தில் கொரோனா காரணமாக வேலையிழந்து வருமானமின்றி இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பண தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கீதா அவரது இரு மகன்களுடன் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து நள்ளிரவு 12.30 மணி அளவில் செந்தில்குமார் ஒரு பெரிய கல்லை எடுத்து சங்கீதாவின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சங்கீதா துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவர்களின் முதல் மகனான ராமகிருஷ்ணன்(15) சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சங்கீதா உயிரிழந்து காணப்பட்டுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் கதறி அழுதுள்ளார். இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக செந்தில்குமார் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். மேலும் கையில் கல்லுடன் நின்றுகொண்டிருந்த செந்திலும் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, செந்தில்குமாரையும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்திலிடமும் விசாரணை செய்துள்ளனர். அப்போது பணபிரச்னையால் அடிக்கடி ஏற்பட்ட சண்டையால் ஆத்திரமடைந்த செந்தில் சங்கீதாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக ஒப்பு கொண்டுள்ளார்.
இதற்கிடையில் சங்கீதாவின் சகோதரர் ராசிபுரம் காவல் நிலையத்தில் செந்தில் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் செந்திலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதை சங்கீதா கண்டித்ததால் கொலை செய்துள்ளார் என கூறியுள்ளார். இதனால் குழப்பமடைந்த போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.