சேலத்தில் காதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முயற்சித்ததையடுத்து, ஆண் குழந்தையுடன் கணவன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பூபதிராஜன். கட்டிட மேஸ்திரியாக பணியாற்றிவரும் இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கட்டுமான பணிக்காக அங்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார். பின் அங்கே உள்ள இன்ஜினீயரிங் காலேஜில் படித்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் அதே பகுதியில் இருக்கக்கூடிய வாடகை வீடு ஒன்றில் தங்கி வசித்து வந்தனர்.
இவர்களுக்கு சந்துரு என்ற ஒரு வயது ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த திருமணமானது மகாலட்சுமியின் தாய், தந்தையருக்கும், உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில் அவர்களது வீட்டிற்கு வருகை தந்த பூபதி ராஜனின் மாமனாரும், மாமியாரும் சேர்ந்து இவரை சித்திரவதை செய்து அடித்து வீட்டை விட்டு துரத்தி உள்ளனர். மேலும் இவரது காதல் மனைவியான மகாலட்சுமிக்கும் இரண்டாவது திருமணம் செய்துவைக்க திட்டம் தீட்டியுள்ளனர். இதனால் அதிர்ந்து போன அவர், தனது ஒரு வயது குழந்தையான சந்துருவுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கண்ணீர் மல்க கதறி அழுதுள்ளார்.
இதனை கண்ட அதிகாரிகள் அவரை அழைத்து விசாரிக்கையில், தான் உயிருக்கு உயிராக காதலித்து கரம் பிடித்த எனது மனைவியை என்னிடம் இருந்து பிரிக்க நினைத்தனர். என்னையும் வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டனர். தற்போது இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் தான் உரிய முறையில் விசாரணை நடத்தி என் மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
இவரது கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை அளிப்பதாக உறுதி அளித்தனர். திருமணமான இந்த மூன்று ஆண்டுகளில் தனது குடும்பத்தை எந்த விதத்திலும் கடன் வாங்காமல் ஒழுங்காக வேலைக்கு சென்று சந்தோசமாக கணவன் வழிநடத்தி வந்த போதிலும் பெண்ணின் உறவினர்கள் இதுபோன்ற செய்வது கணவன்-மனைவியின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் அந்த ஒரு வயது குழந்தையான சந்துருவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக்கி விடும் போல் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.