மனைவியை சூலுக்கியால் தாக்கிய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பரணம் கிராமத்தில் கண்ணன் – சல்பா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு பரத் என்ற மகனும், பிரியதர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் இருவரும் வீட்டிலேயே ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதித்து கடன் பிரச்சினை ஏற்பட்டு ஹோட்டலை இழுத்து மூடியுள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கடன் பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன் விஷம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியை எலி தாக்க பயன்படுத்தும் சூலுக்கியால் பலமாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சல்பாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பிறகு மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன் முந்திரி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.