காணொளி வெளியிட்டுவிட்டு மகளை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவான மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்கள் கணேஷ்-திவ்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 5 வயதில் மகள் இருந்தார். கடந்த வியாழனன்று கணேஷ் லாட்ஜ் ஒன்றில் தனது மகளைத் தூக்கில் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து சித்தூர் உதவி காவல் ஆய்வாளரானா மல்லிகார்ஜுன் கூறுகையில், “சித்தூரை சேர்ந்த கணேஷ் சில வருடங்களுக்கு முன்பு திவ்யாவை காதல் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு 5 வயதில் மகள் இருந்துள்ளார்.
இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையிலும் திவ்யா சென்னையை சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதனால் தம்பதிகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் திவ்யாவின் தாய் மற்றும் சகோதரி கணேஷுக்கு ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில் வியாழன் அன்று கணவன் மனைவி இடையே தகராறு முற்றியதால் கணேஷ் தனது மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன்பின் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கிய அவர் தான் தற்கொலை செய்யப் போவது குறித்து தமிழில் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதன் பிறகு தனது மகளை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெள்ளிக்கிழமை காலை காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க விரைந்து சென்றவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு இரண்டு உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கணேஷ் மற்றும் திவ்யாவிற்கு ஏற்கனவே விவாகரத்து ஆன நிலையில் பணத்திற்காக தனது மனைவி திருமணத்தைத் தாண்டிய உறவில் ஈடுபட்ட தாகவும், மனைவியுடன் உறவில் இருந்த நபர் ஒருவர் தனது குழந்தையிடமும் தவறாக நடந்ததாகவும் அவர் வெளியிட்ட காணொளி குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. இந்த வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் 302, 306, 506 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து தலைமறைவான திவ்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.