நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தவர் வித்யா. வித்யாவின் முதல் கணவன் விபத்தில் இறந்ததை தொடர்ந்து இரண்டாவதாக நாங்குநேரி அருகிலுள்ள முதலை குலத்தைச் சேர்ந்த ஆறுமுகநயினார்க்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வித்யா மற்றும் ஆறுமுகநயினார்க்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதையடுத்து தாயின் வீட்டில் இருந்து குழந்தையை பராமரித்து வந்துள்ளார் வித்யா. குழந்தையை பார்க்க அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் ஆறுமுகநயினார்.
அப்போது வித்யா அடுத்த மாதத்திலிருந்து வேலைக்கு செல்ல வேண்டும் அதனால் பாளையங்கோட்டையில் வீடு வாடகைக்கு பார்க்கும்படி கூறியிருக்கிறார். அதற்கு ஆறுமுகநயினார் மறுப்பு தெரிவித்துள்ளார். தன் வீட்டிலிருந்து தான் வேலைக்கு செல்லவேண்டும் என்றும் முடியாவிட்டால் வேலையை விட்டு நின்று விட வேண்டும் என்றும் அவர் மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு நடந்து வந்துள்ளது.
நேற்று மனைவியின் வீட்டிற்குச் சென்ற ஆறுமுகநயினார் தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது தாய் தந்தை வந்துவிடட்டும் என்று கூறிய வித்யாவை அதுவரை காத்திருக்க இயலாது என்று கூறி அழைத்துள்ளார்.
இதில் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த ஆறுமுகநயினார் வீட்டிலுள்ள அருவாளை எடுத்து வித்யாவை சரமாரியாக வெட்டியுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் வித்யா. பின்னர் ஒன்றும் நடக்காதது போல் கையில் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியேறிய ஆறுமுகநயினார் குழந்தையை உறவினர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
குழந்தையின் சட்டையில் ரத்தக்கறை இருப்பதை பார்த்த உறவினர்கள் வித்யாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வித்யாவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து வித்தியா கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை தொடர்ந்து காவல்துறையினர் ஆறுமுகநயினாரை தேடிவருகின்றனர்.