தூத்துக்குடியில் கணவன் மற்றும் மகன்கள் செலவுக்கு பணம் தராததால் மனைவி தூக்கில் தொங்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னக்காயல் பவுலா நகரில் வசித்து வருபவர் ராஜ். இவரது மனைவி பெயர் ராஜகன்னி. ராஜ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில் கணவர் ராஜ் மற்றும் அவரது இரண்டு மகன்களும் கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் வரும் வருமானத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் கணவன் மற்றும் மகன்கள் வீணாக செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செலவுக்கு பணம் அளிக்காததால் தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.