Categories
தேசிய செய்திகள்

கண்டிப்பா டீச்சர் ஆவார் என் மனைவி… “ஆசையை நிறைவேற்ற 1200 கி.மீட்டர் பைக்கில் பயணம்”… கணவரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

மனைவியின் கனவை நிறைவேற்ற கணவன் 1,200 கிலோமீட்டர் ஸ்கூட்டரில் அழைத்து சென்ற சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகின்றது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினரான தம்பதியினர் தனஞ்செய்-ஹெம்ப்ராம். ஹெம்ப்ராம் ஆசிரியர் பட்டய தேர்விற்கு விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு மையம் குறித்த தகவல் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் குவாலியரில் ஹெம்ப்ராம்க்கு தேர்வு மையம் போடப்பட்டிருந்தது. ஆனால் அவர்களது ஊரிலிருந்து தேர்வு மையம் 1,200 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிறுவயது முதலே ஹெம்ப்ராம்க்கு  ஆசிரியையாக வேண்டும் என்ற ஆசையும் கனவும் இருந்து வந்தது. இதனால் எப்படியாவது தனது லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என உறுதியுடன் இருந்துள்ளார். அவரது கணவர் தனஞ்செய் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்தார்.

அவரும் தனது மனைவியை அவர் ஆசைப்படி ஆசிரியையாக மாற்ற வேண்டும் என எண்ணினார். தற்போதைய சூழலில் போக்குவரத்துக்கள் தடை பட்டிருந்ததால் தேர்வு மையத்திற்கு செல்வது சிரமமாக இருந்தது. 4 மாநில எல்லைகளைக் கடந்து தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டிய சூழலும் இருந்துள்ளது. அதோடு கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு மோசமான சாலைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. பேருந்துகள் மற்றும் ரயில்கள் எதுவும் இயங்காததால் வாடகை காரில் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால் கார் ஓட்டுனர் வாடகையாக 30,000 ரூபாய் கேட்டுள்ளார்.  இது அவர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்தது. அதன்பிறகு மனைவி கனவை நிறைவேற்ற கணவர் சிரமத்தை பார்க்காமல்  மொபட்டில் அழைத்து சென்றார்.

மோசமான சாலை, மழை என பல சிரமங்களைக் கடந்து 1,200 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த தேர்வு மையத்தை சென்றடைந்தனர். இதுகுறித்து தனஞ்செய் கூறுகையில், “மனைவி கர்ப்பமாக உள்ளார். காரில் அழைத்துச் செல்லலாம் என்றால் 30,000 ரூபாய் வாடகைக்கு கேட்டனர். அவ்வளவு பணம் எங்களிடம் கிடையாது. தேர்வு மையத்திற்கு நகையை அடகு வைத்துதான் வந்துள்ளோம். அதிலும் 10,000 கிடைத்த நிலையில் ஐந்தாயிரம் ரூபாய் அறை வாடகை உள்ளிட்ட செலவுகளுக்கு சரியாகப் போனது. வருகின்ற 11ம் தேதியும் தேர்வு எழுத வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் கரடுமுரடான சாலையில் பயணிப்பதற்கு எனது மனைவி தயக்கம் தெரிவித்தார் ஆனால் ஒருவழியாக மழையையும் கடுமையான சாலைகளையும் வெற்றிகரமாக கடந்து வந்துவிட்டோம்.

நிச்சயம் எனது மனைவி தேர்வில் வெற்றி பெறுவார். திறமைமிக்க ஆசிரியையாக மாறுவர் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே உள்ளது” என தெரிவித்துள்ளார். மனைவியுடன் 1200 கிலோ மீட்டர் மொபட்டில் கணவர் பயணித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையான உதவியை செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது உடனடியாக அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |