குடும்பம் நடத்த வர மறுத்த காதல் மனைவியை கூலித்தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அக்கொண்டபள்ளி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கீதா ஓசூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து நாகராஜ் சங்கீதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சங்கீதாவை அழைத்தபோது, அவர் மறுப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த நாகராஜ் சங்கீதாவின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சங்கீதாவை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பிறகு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சங்கீதாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் சங்கீதாவின் தாயார் லட்சுமி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.