ஐதராபாத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட கற்பழிப்பு குற்றவாளிகள் 4 பேரின் உடல்களையும் மறு உடல் கூராய்வு செய்ய தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாம்ஷாபாத் பகுதியை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த மாதம் 27-ம் தேதி 4 நபர்களால் கற்பழித்து பின்னர் எரித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண் டாக்டரை கற்பழித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கடந்த 29-ம் தேதி கைது செய்தனர்.
பின்னர் இவர்களை விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு 7 நாட்கள் அனுமதி வழங்கியது.இதற்கிடையில், போலீசார் விசாரணை தொடர்பாக டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற இடத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது குற்றவாளிகள் 4 பேரும் திடீரென போலீசாரின் ஆயுதங்களை பறித்ததோடு, கற்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் குற்றவாளிகள் 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இதையடுத்து, என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 குற்றவாளிகளின் உடல்கள் ஐதராபாத் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த என்கவுண்டர் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சார்பில் டிசம்பர் 6-ம் தேதி தெலுங்கானா ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் என்கவுண்டர் செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை பதப்படுத்திவைக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது.
இந்நிலையில், இந்த என்கவுண்டர் தொடர்பாக ஐகோர்ட் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்கவுண்டர் செய்யப்பட்டு ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளின் உடல்களை மறு உடல் கூராய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.