ஐதராபாத்தில் பெண் மருத்துவரை எரித்து கொன்ற 4 பேரை என்கவுண்டர் செய்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் என்கவுண்டர் செய்த போலீசாரை விசாரணைகுழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றபோது குற்றவாளிகள் 4 பேருமே காவல்துறையினரை தாக்கினார்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ். சிர்பூர்கர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த குழுவிற்க்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.