துபாயில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கக்கூடிய பறக்கும் படகானது முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
துபாய் அரசு, சுவிட்சர்லாந்தின் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமீரகத்தின் நிறுவனத்துடன் சேர்ந்து தி ஜெட் என்னும் பறக்கும் படகை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது சொகுசு படகாக அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், 8 லிருந்து 12 நபர்கள் இதில் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படகில் எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. ஹைட்ரஜன் எரிசக்தி கொண்டு இயங்கக் கூடிய இந்த படகின் சோதனை விரைவில் துபாயில் உள்ள கடல் பகுதியில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படகில் சத்தம் வெளிவராது. மேலும் நீருக்கு 80 சென்டி மீட்டர் உயரத்திற்கு மேல் பறந்து செல்லக் கூடியது.
இதுமட்டுமல்லாமல் ஹைட்ரஜன் எரிபொருள் இயங்குகிறது என்பதால் புகை உட்பட எந்த உமிழ்வுகளும் வெளிவராது. இதனால் இந்த படகு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று அதனை தயாரித்தவர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், இது ஒரு மணி நேரத்திற்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.