பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி திரை உலக அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கையை பற்றியும் தான் இப்போது எடுத்துக்கொள்ளும் உணவுக்கட்டுப்பாடு குறித்தும் பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, என்னுடைய உண்மையான பெயர் சங்கர மஞ்சி ஜானகி. சவுகார் படத்தில் நான் நடித்த பிறகே எனது பெயர் அனைவராலும் சவுகார் ஜானகி என்று அழைக்கப்பட்டது.
தற்போது எனக்கு 90 வயது ஆகிறது. கடந்த 74 ஆண்டுகளுக்கு முன்பாக நான் நடிக்க ஆரம்பித்தேன். எனக்கு 15 வயதில் திருமணம் நடந்தது. அப்போது நாங்கள் வருமானம் இல்லாமல் தவித்து வந்தோம். அதன்பின் குடும்ப கஷ்டத்தை போக்கவே படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எனக்கு சவுக்கார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தில் எனக்கு 2500 ரூபாய் சம்பளம் கிடைத்தது. மேலும் சிவாஜி கணேசன் தான் எனக்கு நல்ல ஆதரவுகளை வழங்கி வந்தார். அதன்பின் புதிய பறவை படத்தில் கவர்ச்சியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றேன். தொடர்ச்சியாக 500 படங்களிலும் 300 நாடகங்களிலும் நடித்து உள்ளேன் என்று தனது திரையுலக பயணத்தை கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தனது அன்றாட வாழ்க்கையில் தான் எடுத்துக்கொள்ளும் உணவு பழக்க வழக்கங்களையும் கூறினார். அப்போது அவர் கூறியதாவது, “நான் முன்பெல்லாம் காபி குடிப்பேன். ஆனால் இப்பொழுது தேன், இஞ்சி டீ, சீரகப்பொடி கலந்த தண்ணீர் ஆகியவற்றை குடித்து வருகிறேன். தற்போது எனக்கு 90 வயது ஆனாலும் அனைத்து வீட்டு வேலைகளையும் நானே செய்து கொள்கிறேன்.
மேலும் நானே சமைத்து தான் அனைவருக்கும் பரிமாறுகிறேன். நல்ல சத்தான உணவுகளை மட்டுமே நான் சாப்பிட்டு வருகிறேன்.பசி இல்லா நேரங்களில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு படுத்து கொள்வேன்.எனக்கு இரண்டு முழங்கால் ஆபரேஷன் மற்றும் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் என் வேலைகளை நானே தொடர்ந்து செய்வேன். என் வீட்டு வேலைதான் எனது உடற்பயிற்சி என்றும் தனக்கு கடவுளின் மீது பக்தி உள்ளது என்றும் அவர் கூறினார்.