மதுரையில் தங்க நாணயம் என கூறி கவரிங் நாணயங்களை கொடுத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் அம்சவல்லி. 45 வயதான இவர், ஊரடங்கால் வேலையின்றி தவித்து வந்தார். கடன் தொல்லையும் அதிகமாக இருக்கவே, தன்னிடம் உள்ள நகைகளை அடகு வைக்க முடிவு செய்தார். இதற்காக தன்னிடம் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள அடகு கடைக்கு சென்றுள்ளார். நகைகளைக் கொடுத்துவிட்டு பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கியுள்ளார்.
இதனை நீண்ட நேரமாக பார்த்துக்கொண்டிருந்த மர்ம பெண் ஒருவர், அம்சவள்ளியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். தன்னிடம் 4 தங்க நாணயங்கள் இருப்பதாக கூறிய அந்தப் பெண், தன் வசம் இருந்த தங்க நாணயத்தை அம்சவள்ளியிடம் காட்டியுள்ளார். ஒரு நாணயத்தின் மதிப்பு 7 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்றும், தனக்கு அவசர தேவை என்பதால் குறைந்த விலைக்கே விற்பதாகவும் பரிதாபமாக பேசியிருக்கிறார் அந்த பெண்.
அந்த பெண்ணின் பேச்சை நம்பிய அம்சவல்லி, தன்னிடமிருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு 4 நாணயங்களையும் விளங்கியுள்ளார். இதனை அடகு வைத்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று நினைத்து அவர், நாணயங்களை அடகு வைக்க கொண்டு சென்ற போதுதான் அது கவரிங் என தெரியவந்தது. பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்த நாணயங்களை தங்கம் என நம்பி தன் பணத்தையும் இழந்து இருக்கிறார் அம்சவல்லி.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி பெண்ணை தேடி வருகின்றனர். ஏமாறுவோர் இருக்கும் வரையில், மோசடிப் பேர்வழிகள் நம்மை எப்போதும் சுற்றிக்கொண்டு தான் இருப்பார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.