தமிழ் சினிமாவில் மேதகு என்ற படத்தை இயக்கிய கிட்டு தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சத்யா தேவி, கருணாஸ், களவாணி புகழ் திருமுருகன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை ஐசிடபிள்யூ சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1985-ம் ஆண்டு ஈழ தமிழர்களுக்காக என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
என்னுடைய சொந்த காசில் 153 இலங்கை அகதி மாணவர்களை நான் படிக்க வைத்தேன். இதை சொல்வதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இவர்கள் தற்போது நல்ல வேலையில் இருப்பதோடு, வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள். நான் உருவாக்கிய இந்த மிகப்பெரிய கட்டமைப்பை தற்போது ஈஸ்வர் மற்றும் கென் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டேன். அவர்கள் அதைப் பார்த்துக் கொள்ளட்டும். இதற்கு எவ்வளவு செலவானாலும் 10 பேரிடம் பிச்சை எடுத்துக் கூட அந்த பணத்தை நான் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் கருணாஸ் கூறியது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.