சென்னையில் சொந்த உறவினர் வீட்டிலேயே ஜன்னலை உடைத்து 22 பவுன் நகை ரூபாய் 15,000 ரொக்கத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மைதிலி. கணவன் மனைவி இருவரும் திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்ற மாதம் இவர்களது வீட்டில் 22 பவுன் நகை ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது. இது குறித்து பூந்தமல்லி காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில்,
இவரது உறவினரான நாராயணன் என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின் அவரிடம் விசாரிக்கையில் வெல்டிங் தொழில் செய்து வருவதாகவும், வருமானம் குறைவு காரணமாக திருடியதாகவும் தெரிவித்தார். மேலும் கூறிய அவர், நாகராஜன் வீட்டில் ஜன்னல் வைப்பதற்காக ஆள் தேடிக் கொண்டிருந்தார். அப்போது நானே ஜன்னல் வைக்கிறேன் என்று கூறி ஓரளவுக்கு அடித்தால் உடையும் அளவிற்கு பலவீனமாக வைத்து கொடுத்தேன்.
அதன்பிறகு மூன்று நாள் கழித்து அவன் மனைவியுடன் நாகராஜ் வெளியே செல்ல அதை உறுதி செய்தபின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று திருடினேன். பின் பணத்தைக்கொண்டு குடும்பத்துடன் திருப்பதி சென்று அங்கே நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு திரும்பிய சமயத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டேன் என்றும் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..