பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் வைராக்கியத்தால் தான் ஹீரோ ஆனேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சொல்லாமலே, சுந்தர புருஷன் உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருப்பவர் லிவிங்ஸ்டன். இவர் தற்போது சுந்தர புருஷன் படத்தின் அடுத்த பாகத்துக்கான கதையை எழுதி இப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் லிவிங்ஸ்டன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஹீரோவான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “நான், விஜய்காந்த் சார் மேலும் மூன்று பேர் ரயிலில் சென்று கொண்டிருந்தோம். அப்போது தான் முதல் முதலாக எனது ஹீரோ ஆகும் விருப்பத்தினை வாய்திறந்து கூறினேன். அப்போது அங்கிருந்த மூன்று பேரும் நான் சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தனர். எனக்கு மிகவும் அவமானமாய் இருந்தது.
அவர்கள் சிரித்ததை பார்த்த விஜயகாந்த சார் அவங்கள பார்த்து இப்படி எல்லாம் நடந்துக்காதீங்க என்று திட்டினார். அப்போது அந்த நிமிஷம் எனக்குள் அது வைராக்கியமாய் பிறந்தது. எப்படியாச்சும் இவங்க முன்னாடி ஒரு படத்தையாவது ஹீரோவா நடிச்சு காட்டணும்னு அப்போ நான் முடிவு செய்தேன். என்னோட வைராக்கியம் கடவுள் அருளால் நடந்தது” என்று கூறியுள்ளார்.