முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பது சர்ச்சையில் இந்த நிலையில் முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற திரைப்படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்தி உறுதி செய்யப்பட்ட பின்பு தமிழ் அமைப்புகள் பலரும் இந்த படத்தை எதிர்த்தனர். குறிப்பாக விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும், இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் உள்ள ஒருவரின் வரலாற்று படத்தில் தமிழ்நடிகர் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனமும் படத்தின் கதை குறித்தான விளக்கமளித்த நிலையில் நிலையில் விஜய் சேதுபதி இன்னும் இரண்டு நாட்களில் நடிப்பது தொடர்பாக முடிவு எடுக்க இருக்கின்றார். இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மூன்று பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,
என் வாழ்க்கையே சர்ச்சைகள் தான்:
இதுநாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்து வந்துள்ளேன். அது விளையாட்டு ஆனாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகின்றேன். என்னைப் பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரன் படைத்த சாதனைகளில் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லை என்பதாலும், இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள், என்னை வழிநடத்திய ஆசிரியர்கள், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும், அதற்குக் காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இத் திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.
கடுமையாக பாதிக்கப்பட்டேன்:
இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக எங்கள் குடும்பம் தங்கள் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டுவெடிப்பு என எனக்கு நிறைய தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டது பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.
போரின் இழப்பு மற்றும் வலி எனக்கு தெரியும்:
ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர், வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்று இருந்தோம். ஆதலால் போரால் நிகழும் இழப்பும், அதனால் ஏற்படும் வலியும் என்ன ? என்பது எனக்குத் தெரியும். 30 வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியில் தான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்ற இந்த சூழ்நிலையில் எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சாதித்தேன் என்பது பற்றிய படம் தான் 800.
திரித்து பேசுகிறார்கள்:
இது இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நான் பேசிய சில கருத்துக்கள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான். உதாரணமாக நான் 2009 ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019 இல் கூறியதை தமிழர்கள் கொன்று குவித்த நாள் தான் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்.
போரை ஆதரிக்க மாட்டேன்:
ஒரு சராசரி குடிமகன் சிந்தித்துப் பாருங்கள். போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு நடக்கும் என்பது தெரியாது ? என் பள்ளி காலத்தில் என்னுடைய பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டார். வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால் தான் நிஜம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது, ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்ல போர் நிறைவடைந்ததால் கடந்த பத்து வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கின்ற கருத்தினை தெரிவித்தேன். ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைக்கு ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்.
தாழ்வு மனப்பான்மை:
அடுத்து எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன் தான். எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றொரு தவறான செய்தி. தமிழ் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் என முரளி கூறினார் என சொல்கிறார்கள். இயல்பாகவே சிங்களர்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகமாக வாழ்வதால் எல்லோரிடமும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்யும், அது இயற்கை. அது என்னிடம் இருந்தது காரணம் எனது பெற்றோரும் கூட அப்படிப்பட்ட சிந்தனையில் தான் இருந்தார்கள். அதையும் மீறி கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் பள்ளியின் கிரிக்கெட் அணியில் என்னை பங்கேற்க தூண்டியது. எனது முயற்சியால் சேர்ந்தேன், தனது திறமையால் நான் ஒரு தவிர்க்க இயலாதவனாக மாறினேன். எனவேதான் தாழ்வுமனப்பான்மையை தூக்கி எறிந்து உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள் என்ற எண்ணத்தில் தான் கூறினேன்.
நிறைய உதவி செய்துள்ளேன்:
என்னை பொருத்தவரை சிங்களவர்களாக இருந்தாலும், மலையக தமிழர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒரு மலையக தமிழனாக நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும், ஈழ மக்களுக்கு செய்த உதவிகள் தான் அதிகம். செய்யும் நன்மைகளை சொல்லிக் காட்டுவதை என்றைக்கும் நான் விரும்பியது அல்ல. ஆனால் இன்றைக்கு அதை சொல்லியாக வேண்டியசொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்றேன். ஐநாவின் உணவு தூதராக இருந்த போது 2002 ஆம் ஆண்டில் LTTEயின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கும் அந்தத் திட்டத்தை எடுத்து சென்றது முதல் பின் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நான் செய்த உதவிகளை அந்த மக்கள் அறிவர்.
போர் முடிவுற்ற பின் கடந்த பத்து வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான பவுண்டேஷன் ஆஃ ப் குட் நெஸ் மூலம் ஈழ மக்களுக்கு செய்யும் உதவிகள் தான் அதிகம். ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் குழந்தைகள் கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் என பல வகைகளில் பல உதவிகள் செய்து வருகின்றேன். மக்கள் நல்லிணக்கத்துக்காக வருடாவருடம் முரளி ஹர்மனி கப் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் வடக்கு மற்றும் கிழக்கில் நடத்தி வருகின்றோம். இன்னும் இதுபோல் ஏராளமான விஷயங்கள் உள்ளன. நான் இலங்கை அணியில் இடம் பெற்று சாதனை படைத்த காரணத்தினாலே என் மீது ஒரு தவறான பார்வை இருக்கிறது. நான் இந்தியாவில் பிறந்திருந்தாலும், நான் இந்திய அணியில் இடம் பெற முயற்சித்திருப்பேன். இலங்கைத்தமிழனாக பிறந்தது எனது தவறா ?
இவை அனைத்தையும் விடுத்து சிலர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும் ஈழத் தமிழினத்திற்கு எதிரானவர் என்பது போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. எவ்வளவு விளக்கம் அளித்தாலும் எதிர்ப்பவர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும், என்னை பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில், நடுநிலையாளர்கள், பொது மக்களுக்கும் என் விளக்கத்தை அளிக்கின்றேன் என்று அந்த அறிக்கையில் முரளிதரன் தெரிவித்துள்ளார்.