சட்ட மேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் ஆட்சி காலத்தில் எல்லாம் ஆளுநர்கள் இருந்த இடம் கூட தெரியாமல் இருந்து வந்தனர்.
ஆனால் இன்று தமிழகத்தில் ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பதோடு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கும் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். தமிழக ஆளுநர் திமுக அரசு எடுக்கிற எந்த ஒரு முடிவுக்கும் ஒத்துழைக்கவில்லை. ஆளுநர் தமிழகத்தின் 6-ம் விரலாக தான் இருக்கிறார். மேலும் அந்த 6-ம் விரலை நாம் வெட்டி எறிய வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.