ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைக்கு சென்ற மூதாட்டியிடம் உதவி செய்வதாக கூறி மர்மநபர்கள் 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் நாகலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அங்கம்மாள்(63). இந்நிலையில் இவர் காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் கூட்டமாக இருந்ததால் காவல்துறையினர் கூட்டத்தை சீராக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து அங்கம்மாள் முகக்கவசம் அணியாமல் சென்றதை பார்த்த மர்மநபர்கள் உதவுவது போல் நடித்து அவரிடம் இருந்த 3 பவுன் வளையல் மற்றும், 5 பவுன் தங்க சங்கிலி என மொத்தம் 8 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கம்மாள் உடனடியாக இதுகுறித்து அங்கிருந்த காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.