வருமுன் காக்கும் வகையில் நானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்குமாறு அறிவுறுத்தியதோடு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வீட்டில் இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் சென்னை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் இல்லத்தில் ஒட்டப்பட்டது பெரும் பரபப்பானது. இதற்கு மக்கள் நீதி மையம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முகவரி மாற்றத்தால் நிகழ்த்த தவறு என்று மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் நான் தனிமைப் படுத்தப் படவில்லை வருமுன் காப்பதே சிறந்தது என்ற வகையில் நானாகவே இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.