இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளஸ்ஸிஸ் நாளைய போட்டியின் போது தான் டாஸ் போடப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
தான் டாஸில் தொடர்ச்சியாக தோற்பதனால் வேறு வீரரை டாஸ் போட அனுப்பவுள்ளேன் என்றும் அவரது அதிர்ஷ்டம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு கைக்கொடுக்குமா என்பதை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் முதல் இன்னிங்ஸில் தங்கள் அணி வீரர்கள் ரன் குவித்தால் நாளைய போட்டியில் வெற்றி பெறலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.டூபிளஸ்ஸிஸ் கடைசியாக ஆசிய மண்ணில் விளையாடிய ஒன்பது டெஸ்ட் போட்டிகளிலும் டாஸில் தோற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.