பனிப்பொழிவால் உறைந்த தெருவை கடக்க முயன்ற 9 வயது சிறுமி 40 முறை வழுக்கி விழுந்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த சீதோஷ்ண நிலை காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் வலுக்கும் தன்மையுடன் உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு நடை பயணம் மேற்கொள்பவர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் உள்ள ஒரு தெருவை கடக்க முயன்ற 9 வயது பள்ளிச்சிறுமி 40 முறை வழுக்கி விழுந்துள்ள சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மத்திய கிவ் பகுதியை சேர்ந்த 9 வயது பள்ளிச்சிறுமி மரியா மோசியாங்கோ நேற்று மாலை கொப்லிட் ஆண்டிரிவ்ஸ்கை யுஸ்விஸ் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அடுத்த தெருவில் உள்ள தனது சகோதரனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
அதற்காக கொப்லிட் ஆண்ட்ரிவ்ஸ்கை யுஸ்விஸ் தெருவை கடக்க நடந்து சென்றுள்ளார். அப்போது கடுமையான பனி காரணமாக சாலை மற்றும் தெரு முனை பகுதிகள் மிகவும் வழுக்கும் தன்மையுடையதாக மாறியுள்ளது. யுஸ்விஸ் தெருவை மரியா முதல் முறை கடக்க முயற்சித்த போது பனிப்பொழிவு காரணமாக தெருவின் தரை உறைந்து இருந்ததால் அவர் வழுக்கி கிழே விழுந்துள்ளார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட சிறுமி மீண்டும் எழுந்து தெருவை கடக்க முயற்சித்துள்ளார். ஆனால், மீண்டும் அவர் வழுக்கி விழுந்தார்.
அவர் தொடர்ந்து முயற்சித்தபோதும் கிழே விழுந்துகொண்டே இருந்துள்ளார். சிறுமி தெருவை கடக்க முயற்சித்து கிழே விழுவதை கண்ட ஒரு நபர் சிறுமிக்கு உதவ முன்வந்தார். ஆனால், சிறுமிக்கு உதவ முயற்சித்தபோது நிலை தடுமாறியதால் அதிர்ச்சியடைந்த அந்த நபரும் சிறுமிக்கு உதவாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். யாரும் உதவி செய்யாதபோதும் அந்த சிறுமி தொடர்ந்து எழுந்து தெருவை கடக்க முயற்சித்து தோல்வியடைந்து வந்தார். மொத்தம் 40 முறை அந்த சிறுமி வழுக்கி கிழே விழுந்தார். ஆனாலும், விடாமுயற்சியால் இறுதியாக மரியா அந்த தெருவை கடந்து சென்றார்.
மரியா 40 முறை கிழே வழுக்கி விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து அவரிடம் உள்ளூர் ஊடகங்கள் இது தொடர்பாக பேட்டி எடுத்தன. அதில் தெருவை கடக்க முயன்றபோது 40 முறை வழுக்கி விழுந்தாலும் தனக்கு எந்த பெரிய காயமும் ஏற்படவில்லை, எனவும் சிறு சிராய்ப்பு மட்டுமே ஏற்பட்டதாகவும் புன்னகையுடன் தெரிவித்தார்.