ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர்கள் பெயரை கூறி 63 பவுன் நகை மற்றும் பணத்தை ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூர் சிறுவயல் பகுதியில் விஜய்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 13 1/2 பவுன் நகைகளை அவரது உறவினரான கரூரை சேர்ந்த சவுமியா(24) என்ற பெண் வாங்கியுள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்கு பிறகு விஜய் நகைகளை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு சவுமியா எனக்கு அமைச்சர்களை நன்றாக தெரியும் என்றும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய விஜய் அரசு வேலையை தனது தம்பி தனுஷிற்கு வாங்கித்தருமாறு கூறிய நிலையில் சவுமியா மேலும் 75,000 ரூபாயை வாங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து விஜயின் உறவினர்களான பாலமுருகன், விஸ்வ ஆகியோரிடம் இருந்தும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 3 லட்சம் வரை வாங்கியுள்ளார். இந்நிலையில் பணம் வாங்கிக்கொண்டு சவுமியா வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் விஜய் ராமநாதபுரம் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக்கிடம் சவுமியா மற்றும் அவருக்கு உதவிய சிறுவயலை சேர்ந்த சதிஷ் பற்றி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த விசாரணையில் சவுமியா இதே போல் ராமநாதபுரம், கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பலரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. மேலும் சவுமியா இதுவரை 6 பேரிடம் இருந்து 63 பவுன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து இதுபோன்ற செயல்களில் தன்மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என அப்பகுதியில் உள்ள வாலிபர்களை காதலிப்பதுபோல் நடித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் இதுவரை சவுமியா 4 பேரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதில் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியில் உள்ளவர் என்பதும் குறிப்பிடதக்கது. இதனைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் சவுமியா மற்றும் அவருக்கு உதவிய சதீஷ் இருவரும் சேலம் சின்னத்திருப்பதியில் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து ராமநாதபுரம் நீதிமாற்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவுமியாவை மதுரை சிறையிலும், சதீஷை விருதுநகர் சிறையிலும் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.