ஐக்கிய நாடுகள் சபையில் இயங்கிவரும் விட்டல் வாய்சஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளில் உள்ள இளம்பெண் அரசியல் தலைவர்களை அழைத்து மாநாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கரூர் மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான ஜோதிமணி அழைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஹாரிசன் மாகாணத்தில் நடைபெறும் இந்த மாநாடு நவம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி அமெரிக்கா சென்ற ஜோதிமணி பேன்ட் -ஷர்ட் அணிந்து சென்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இதனைக் கண்ட நெட்டிசன்கள், ஜோதிமணி மணப்பாறையில் சுஜித் வீட்டில் சேலை அணிந்து இருந்ததையும், அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒன்றிணைத்து கடுமையாக விமர்சித்தனர்.
‘ஒரு பெண் எப்படிப்பா பேன்ட் -ஷர்ட் அணியலாம், அய்யோ கலாசார கேடு வந்திருச்சு, வாங்க உடனே நாட்டை திருத்துவோம். பெண்கள் நம் நாட்டின் கண்கள் இல்லையா’ என்று முழங்கிய வலைதள கலாசார சீர்த்திருத்தவாசிகள் ஜோதிமணியை வசைபாடி தீர்த்தனர்.
இந்நிலையில், தனது ஆடை குறித்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும்வகையில் ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில், “சர்வதேச பெண் தலைவர்கள் சந்திப்பிற்கான பயணத்திற்கு எனது தொகுதியிலிருந்தும் வெளியிலிருந்தும் குவிந்துவரும் வாழ்த்துகள் என்னை பெரு மகிழ்ச்சி அடையச் செய்கிறது. அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.
எனது உடைகளை விமர்சனம் செய்யும் காவி, பெண் வெறுப்பு நபர்களின் மனக்கசப்பை புரிந்துகொள்ள முடிகிறது. எந்தத் தருணத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அது எனது தனிப்பட்ட உரிமையும்கூட. ஆகவே அமைதி கொள்க!
பெண்களின் உடைகள் ஏன் எப்போதும் விவாதத்திற்கான ஒரு பொருளாக இருக்க வேண்டும்? ஒருவருடைய தனிப்பட்ட தேர்வுகள் பற்றி மற்றவர்களுக்கு என்ன கவலை? இங்கு இருக்கும் அனைத்து ஆண்களும் குறிப்பாக என்னை விமர்சனம் செய்பவர்கள் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வேட்டியை தான் அணிந்துகொண்டு இருக்கிறார்களா? தமிழ் இந்திய கலாசாரம் என்பது அடிப்படையில் பிறகு அவர்களை மதிப்பது. அதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
காட்டன் புடவைகள் ஜீன்ஸ், சட்டைகள் மீது எனக்கு ஆழ்ந்த பிரியம் உண்டு. நான் திரும்பியவுடன் மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன் உங்கள் மனக் கவலைகளுக்காக!
அதுவரை கலாசாரம் என்பது என்ன என்று கொஞ்சமாவது ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். அதை பெண்கள் மட்டும் ஏன் சுமந்து செல்ல வேண்டும்? ஆண்கள் ஏன் சுமக்கக் கூடாது?
நான் கலந்துகொள்ள இருக்கும் இந்த சந்திப்பிற்கான மிக முக்கியமான ஒரு திட்டம் பெண் தலைவர்கள் எப்படி அவர்களுடைய உடைகள் திருமண வாழ்க்கை அவர்களுடைய புறத்தோற்றம் அவர்கள் எப்படி சிரிக்கிறார்கள் போன்ற விஷயங்களின் அடிப்படையில் விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதுதான்.
இந்தப் பெண் வெறுப்பு மனநிலையை எதிர்த்துப் போராட வேண்டும் என்பது நாங்கள் மிகத் தீவிரமாக இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் எங்களோடு இருக்கும் எல்லா ஆண்களுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்
https://www.facebook.com/jothiiyc/posts/2541422769286254