ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூகவலைதளங்களில் இந்திய அணியின் பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் புகைப்படத்தைத் தான் நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். கடந்த 10ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக ஹாட்ரிக், பின் நவம்பர் 12ஆம் தேதி விதர்பா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் ஹாட்ரிக் என மூன்று நாட்களிலேயே அவர் டி20 போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார்.
மிரட்டலான பவுலிங் ஃபார்மில் இருக்கும் அவர், உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான இன்றைய சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியிலும் மீண்டும் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றும் வாய்ப்பு அன்கீத் ராஜ்பூட்டால் நழுவியது.
ராஜஸ்தான் – உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த உத்தரப்பிரதேச அணிக்கு எதிராக கடைசி ஓவரை வீசினார், தீபக் சாஹர். தனது அபாரமான பந்து வீச்சினால் அவர் அந்த ஓவரின் முதல், மூன்றாவது, நான்காவது பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இதனிடையே, அவர் வீசிய இரண்டாவது பந்தை எதிர்கொண்ட அன்கீத் ராஜ்பூட் ஒரு ரன் எடுத்ததால், தீபக் சாஹரின் ஹாட்ரிக் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ்ஸானது. இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், தீபக் சாஹர் டி20 போட்டியில் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இறுதியில், தீபக் சாஹர் தலைமையிலான ராஜஸ்தான் அணி, இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தியது.