தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராவணனாக சைஃப் அலிகான் நடிக்க, சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இணையதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்தப் படத்தை பலரும் கார்ட்டூன் படம் என்று விமர்சித்தனர். இந்நிலையில் படத்தின் டீசர் குறித்து தற்போது நடிகர் பிரபாஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, நான் ஆதிபுருஷ் டீசரை 3d எஃபெக்டில் பார்த்தேன். அப்போது நான் ஒரு குழந்தையாகவே மாறி பரவசம் அடைந்து விட்டேன். ஆதிபுருஷ் டீசரை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 60 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இது திரையரங்குகளில் காண வேண்டிய ஒரு படம். இந்த படத்திற்காக உங்களுடைய முழு அன்பும், ஆதரவும் வேண்டும். இனி வரும் 10 நாட்களுக்கு படம் குறித்த அடுத்தடுத்த புதிய சர்ப்ரைஸ்கள் உங்களுக்காக வரும் என்று கூறினார். மேலும் இணையதளத்தில் படத்தின் டீசரை பல்வேறு விதமாக ட்ரோல் செய்தாலும் படத்தின் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களுக்கு நான் கேரண்டி என்று பிரபாஸ் கூறியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.