எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க பயந்ததாக அரவிந்த்சாமி கூறி உள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் கடந்த 22 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அரவிந்த்சாமி இப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, ஒன்றரை வருடங்களாக தலைவி படம் உருவாகி வருகிறது.
எனக்கு இப்பொழுது மைக்கை பார்க்கும் போதெல்லாம் “என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே” என்று தான் ஆரம்பிக்க தோன்றுகிறது. ஆனால் இந்த வார்த்தைகள் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது. ஆகையால் நான் வணக்கம் என்று சொல்லியே தொடங்குகிறேன்.
முதலில் என்னை இப்படத்தில் புரட்சித் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த ஏ.எல்.விஜய்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதலில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்க பயந்தேன். ஆனால் நான் பார்த்து வியந்த மாமனிதரின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்ற பொறுப்புடன் நடித்தேன். ஆகையால் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்க கஷ்டப்படவில்லை. ரசித்து நடித்தேன் என்று கூறியுள்ளார்.