பறவைகளை வேடிக்கை பார்க்க சென்ற நபருக்கு பெரிய அளவில் புதையல் கிடைத்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த 50 வயது நபரொருவர் மெட்டல் டிடெக்டர் மூலமாக பூமிக்கு அடியில் கிடக்கும் உலோக பொருட்களை தேடி எடுக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார். அவருக்கு பறவைகள் என்றால் கொள்ளை பிரியம். அப்படி அவர் பறவைகள் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, பக்கத்திலுள்ள வயலிலிருந்து ஏதோ பளிச்சிடும் பொருள் ஒன்று கிடப்பதை கண்டுள்ளார். ஏற்கனவே மெட்டல் டிடக்டர் மூலம் பூமிக்கடியில் இருக்கும் உலோக பொருட்களை தேடி எடுக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால் அது தங்க நாணயம் என்பது அவருக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து உடனே வீட்டுக்குப் போய் தன்னுடைய மெட்டல் டிடக்டர், இரண்டு பெரிய பைகள் மற்றும் ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு அந்த வயலுக்கு வந்துள்ளார். அப்போது ஓரிடத்தில் அவருடைய மெட்டல் டிடெக்டர் பலத்த ஒலி எழுப்பியுள்ளது.அந்த இடத்தில் ஒரு வளையல் போல ஏதோ ஒன்று இருந்துள்ளது. ஆனால் அது வளையல் அல்ல எடுத்து பார்த்தால் ஒரு பானையின் வாய்பகுதியாக இருந்துள்ளது. அதை எடுத்து அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தபோது அதிர்ச்சியில் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்துள்ளார்.
இதற்கு காரணம் என்னவென்றால் அதற்குள் 1300 தங்க நாணயங்கள் இருந்துள்ளன. இதில் ஒரு நாணயத்தின் மதிப்பு 650 பவுண்டுகள். மொத்தம் 1300 நாணயங்களின் மதிப்பை பார்த்தால் 800, 000 பவுண்டுகள். இதையடுத்து தனக்கு இவ்வளவு பெரிய புதையல் கிடைத்துள்ளது என்பதை பாதுகாப்பு கருதி அவர் தன்னுடைய பெயரை கூட வெளியிட மறுத்துள்ளார். பறவைகளை வேடிக்கை பார்க்கப் போனவர் கடைசியில் பெரிய புயல் ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.