தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானாவில் கவர்னராக பதவி அமர்ந்து 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இவர் தற்போது 4-வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதால் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டவர்களிடம் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். அவர் கூறியதாவது, என்னுடைய பணி சில நேரங்களில் இடைஞ்சலாக இருப்பதாக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
என்னை குடியரசு தின விழா அன்று கொடியேற்ற விடாததால் ராஜ் பவனுக்குள் மட்டுமே கொடியேற்றினேன். அந்த சமயத்தில் கவர்னர் உரையை கூட என்னை ஆற்ற விடவில்லை. நான் என்னுடைய பணிகளில் இடையூறு ஏற்படுத்தாதோடு இடைவெளி இல்லாமல் செய்து கொண்டிருக்கிறேன். என்னிடம் வந்து ஒருவர் எப்போது பார்த்தாலும் தமிழகத்தில் இருக்கிறீர்களே நீங்கள் ஆளுநராக பதவி வகிக்கும் 2 மாநிலங்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்.
அந்த 2 மாநிலங்களுக்கும் எதுவுமே ஆகவில்லை. நான் எப்போதும் தெலுங்கானாவில் இருப்பதாக புதுச்சேரியிலும் புதுச்சேரியில் இருப்பதாக தெலுங்கானாவிலும் கூறுகிறார்கள். நான் புதுச்சேரிக்கு செல்லும்போதெல்லாம் அண்ணன் நாராயணசாமி தெலுங்கானாவில் விரட்டி விட்டு விட்டார்களா எப்போதும் இங்கேயே இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். நான் இன்றைக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
நான் தெலுங்கானாவிலும் புதுச்சேரியிலும் முழுமையாக என்னுடைய பணியை செய்து வருகிறேன். அதேபோன்று அந்த மாநிலங்களில் விரட்டுவதால் எதற்காக தமிழகத்தில் மூக்கை நுழைக்கிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்காகவும் இப்போது ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் தமிழகத்தில் மூக்கை மட்டும் அல்ல தலையையும் நுழைப்பேன். காலையும் நுழைப்பேன். வாலையும் நுழைப்பேன். என்னை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.