திரைத் துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் வீரப்பனின் மகள் நான் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
தமிழக அதிரடிப்படையால் கடந்த 2004ஆம் ஆண்டு சொல்லு சுட்டுக் கொல்லப்பட்டவர் பிரபல சந்தன கடத்தல்காரர் வீரப்பன். இவருக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் வித்யா ராணி என்பவர் பா ஜனதா கட்சியில் கடந்த வருடம் இணைந்தார். மேலும் இளைய மகளான விஜயலட்சுமி தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.
அந்த வகையில் அவர் தற்போது ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் சினிமாவிற்கு வந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “நான் நடிக்கும் மாவீரன் பிள்ளை திரைப்படம் விவசாயிகள் மற்றும் மது ஒழிப்பு போராட்டங்களை மைய்யப்படுத்தி இருப்பதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
அதுமட்டுமின்றி சினிமாவில் நடிக்க எனது கணவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். மேலும் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.