காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால் நான் அவருக்கு பக்க பலமாக இருப்பேன் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் களம் காண்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மொத்தம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவேகவுடா, தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் ஜி.எஸ் பசவராஜை எதிர்த்து போட்டியிடுகின்றார்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவது மற்றும் தனது எதிர்கால திட்டம் பற்றியும் தேவேகவுடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தேன். ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையின் காரணமாக நான் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் மறைப்பதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்திலும் நான் இல்லை. ஆனால் இனி நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இல்லை.
நான் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பிருப்பதாக குமாரசாமி கூறியிருந்தார். அது பற்றி நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. எங்கே நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிடுவாரோ என்பது தான் எனக்கு பெரும் கவலை. இதை பிரதமர் மோடியின் முகத்தை பார்த்து சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியமுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், நான் அவருக்கு பக்கபலமாக இருப்பேன். நான் பிரதமர் ஆக வேண்டிய அவசியம் இல்லை. என்று அவர் கூறினார் .