இடப்பிரச்சினை காரணமாக முதியவரை கூலி தொழிலாளி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பிலாவடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் இவரது மனைவியின் தங்கை மகனான பூமாடன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிலாவடியானுக்கும், பூமாடனுக்கும் இடையே நீண்ட நாட்களாக இடப்பிரச்சனை தகராறு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து வத்திராயிருப்பு காவல் நிலையம் அருகே உள்ள கோவிலின் அரசமரத்தடியில் பிலாவடியான் உட்கார்ந்திருந்தார்.
அந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற பூமாடன் அரிவாளால் பிலாவடியான் தலையின் பின்புறம் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் படுகாயமடைந்த பிலாவடியான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிலாவடியானின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய பூமாடனை வலை வீசி தேடி வருகின்றனர்.