தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக விஜய் மக்கள் மன்றம் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ள பனையூரில் அமைந்துள்ளது. நடிகர் விஜய் 5 வருடத்திற்கு பிறகு தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதாக அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக சென்னை பனையூருக்கு ரசிகர்களின் கூட்டம் படையெடுத்தவாறு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று சேலம், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்திக்கிறார். இவர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
அதன் பிறகு விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிவதோடு நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளையும் விஜய் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இவர்களுக்கு நடிகர் விஜய் பிரியாணி விருந்து வழங்குகிறார். இதனையடுத்து அலுவலகத்திற்குள் வரும் ரசிகர்களிடையே அவர்களுடைய செல்போன்கள் வாங்கி வைத்துக் கொள்ளப்படும். மேலும் ரசிகர்களுக்கு விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் சார்பாக புகைப்படம், ஆதார் எண், தொகுதி மற்றும் பதவி உள்ளிட்டவைகள் அடங்கிய அடையாள அட்டையும் வழங்கப்பட இருக்கிறது.