இதயம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கதிர் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1991 ஆம் வருடத்தில், நடிகர் முரளி நடித்து வெளியான இதயம் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் இயக்குனர் கதிருக்கு இது தான் முதல் திரைப்படம். அதன்பின்பு, காதலர் தினம் மற்றும் காதல் தேசம் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.
இத்திரைப்படங்களும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது வரை மறக்க இயலாத காதல் திரைப்படங்களாக இருக்கிறது. அதன் பின்பு, இயக்குனர் கதிர், கடந்த 2002 ஆம் வருடத்தில் காதல் வைரஸ் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தோல்வியடைந்ததால் அதன் பின்பு அவர் எந்த படங்களும் இயக்கவில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் மறுபிரவேசம் கொடுக்க தயாராகி விட்டார் கதிர். இவர் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் கிஷோர் என்ற புதுமுக நடிகர் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் கதிர் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் திரையுலகில் படம் இயக்க தொடங்கியிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.