தகுதியான நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பு தெரிவித்தால், அது பற்றிய புகாரை எனக்கு நேரடியாக அனுப்பலாம், நான் நடவடிக்கை எடுப்பேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய நிதித் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசியபோது, “ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் விருந்தோம்பல் துறையினர், கடன்களை மறு சீரமைக்க வேண்டும் அல்லது கடனைத் திரும்பச் செலுத்தும் தவணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மத்திய அரசின் ‘ஆத்மாநிர்பார் பாரத்’ திட்டத்தின் அடிப்படையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் நிதி, அவசர கடன் உறுதித் திட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில வங்கிகளில் உத்தரவாதம் இல்லாமல் கொடுக்கப்படும் அந்தக் கடன்களை தர மறுப்பதாக மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தகுதியான நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை வங்கிகள் ஒருபோதும் மறுக்க கூடாது. அவ்வாறு மறுப்பு தெரிவித்தால் உடனடியாக அது குறித்த புகாரை எனக்கு நேரடியாக அனுப்பலாம். நான் தக்க நடவடிக்கை எடுப்பேன். தொழில் துறைக்குத் தேவையான அவசர கடனுக்காக புதிய மேம்பாட்டு நிதி மையம் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது” என கூறினார்.