திமுக தலைவர் மு க ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்கின்ற தலைப்பில் மக்களை சந்திக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசியதாவது, தமிழகம் அதிமுக ஆட்சியால் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மக்களுக்கு துரோகம் செய்வது போன்றவற்றை தான் அதிமுக செய்கிறது.
எந்த தொகுதிகளிலும் புதிய திட்டங்கள் இல்லை.மக்களுக்கு அவர்களது அடிப்படை வசதிகளைக் கூட அதிமுக அரசு செய்து தராது. இதனை கருத்தில் கொண்டு வரும் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இதற்காக தான் மக்களை நான் நேரில் சந்தித்து அவர்களது பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு வருகிறேன்.
இந்நிலையில், வரும் 29ஆம் தேதி முதல் அடுத்த 100 நாட்களுக்கு 234 தொகுதிகளிலும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்கின்ற தலைப்பில் மக்களை நான் நேரடியாக சந்திக்க உள்ளேன்.
இதன் முதல் சந்திப்பு திருவண்ணாமலையில் தொடங்கவிருக்கிறது. அப்போது பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நானே நேரடியாக பெற்று அதற்கு சீல் வைப்பேன்.
அதன்பின் திமுக ஆட்சி அமைத்ததும் 100 நாட்களில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலிக்க தனித்துறை அமைக்கப்படும். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செய்யாதவற்றை திமுக நிச்சயம் செய்யும். இதன் மூலமாக ஒரு கோடி குடும்பங்களின் குறைகளாவது தீர்க்கப்படும் என்பது உறுதி. அடுத்தடுத்து வரும் பிரச்சாரங்கள் புதிய கோணத்தில் இருக்கும் என்று தெரிவித்தார்.