சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தொற்றை கண்டறியும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சென்னையில் சுமார் 15 மண்டலங்களுக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி என 15 சிறப்பு அதிகாரிகளை நியமித்து கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் இன்னும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எந்த தளர்வுகளும் அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும் மக்கள் நடமாட்டம் ஆங்காகே இருந்து வருகிறது.
ஏற்கனவே, வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் சரிவர மக்கள் விதிகளை கடைபிடிக்கவில்லை. இந்த நிலையில், மாஸ்க் அணியாதவர்களுக்கு கட்டாயமாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில், நேற்று வரை சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக ஆகிய மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.