தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சென்னை, சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது. அம்மா உணவகங்களில் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது என கூறினார். டெல்லி மாநாட்டில் பங்கேற்றோர் விவரங்கள் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தெரிவிக்க கோரியதாகவும், தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம் என்று கூறிய அவர், கொரோனா தொற்றின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என வேண்டுகொள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் அதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும், அரசின் சட்டத்தை பொதுமக்கள் மதிக்க வேண்டும் என கூறியுள்ளார். தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாவும், மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.