அரசு வெளியிட்டுள்ள 71 அங்கீகாரமில்லாத கல்லூரிகளில் மாணவர்கள் சேரக்கூடாது என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 731 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உரிய கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாத 58 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தினுடைய இணைப்பு அந்தஸ்தைப் பெறாத 13 கல்வியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள இந்த 71 கல்வியியல் கல்லூரிகளின் பட்டியலை இணையத்தில் வெளியிட்டு அவற்றில் B.Ed., M.Ed., போன்ற படிப்புகளில் புதிதாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. மாணவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும். இதையும் மீறி மாணவர்கள் யாரும் அந்த கல்லூரிகளில் சேர்ந்தால் அதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்றுக் கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.