ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் சார்பில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் மக்கள் டீம் இணைந்து தடுப்பூசி விழிப்புணர்வு முகாமை நடத்தியுள்ளனர். இதில் தடுப்பூசி செலுத்த வரும் முதல் 10 பெண்களுக்கு சில்வர் பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 நபர்களுக்கு மின்விசிறியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பழனிக்குமார், வட்டார மருத்துவர் செய்யது ராசிக்தீன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நகராட்சி கமிஷனர் பூபதி, மக்கள் டீம் காதர் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து வருகின்ற 26 ஆம் தேதி மேல தெருவில் உள்ள ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தடுப்பூசி போட வரும் பெண்களுக்கு இலவசமாக பொருள்கள் வழங்கப்படும் என ஜமாத் கூட்டமைப்பு தலைவர் ஹாமிது இபுராகிம் தெரிவித்துள்ளார். இத்தகைய விழிப்புணர்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.