தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை சரக்கு வாகனங்களில் அழைத்து சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு ஓட்டிற்கு பணம் விநியோகிப்பதை தடுக்கவும், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி செல்லக்கூடாது, பயணிகள் வாகனத்தில் தான் ஏற்றி செல்ல வேண்டும் என்று போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு ஏற்றி சென்றால் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 6 மாதம் சிறை, ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம் என கூறியுள்ளது.