தமிழக பாஜகவில் சமீப காலமாகவே புயல் வீசிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் கட்சிக்குள் அவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது, நிர்மல் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் இருந்து விலகியது என பிரச்சனைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இந்த அனல் பறக்கும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள கமலாயத்தில் அனைத்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அண்ணாமலை நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது எந்த ஒரு சிறிய தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கட்சி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அனைவரும் வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் தான் முழு கவனத்தையும் செலுத்தி கட்சி பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அண்ணாமலை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.