உலகம் முழுவதும் உலக இளைஞர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இளைஞர்களைப் போற்றும் இந்தத் தினத்தில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற, தேவையான நலத்திட்டங்களை செய்துவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியான குமுளி மலைப்பாதையில், குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பைகளை இளைஞர் குழுவினர் அகற்றினர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள குமுளி மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதி என்பதால், வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும், சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக இவ்வழியே சென்றுவருகின்றன. இதனால், குமுளி செல்லும் மலைப்பாதைகளில் குவிந்து கிடந்த பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை அகற்றினர்.
தேனி மாவட்டம் கூடலூர் இளைஞர்கள் நல அறக்கட்டளை தலைவர் சுரேஷ், செயலாளர் சீனு, பொருளாளர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் லோயர் கேம்ப் பென்னி குவிக் மணிமண்டபத்திலிருந்து குமுளி பேருந்து நிறுத்தம் வரை பிளாஸ்டிக் பொருள்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்தக் குழுவினர் அகற்றிய கழிவுகள் மொத்தம் 4.5 டன் என தெரிவித்துள்ளனர்.