நாடுமுழுவதும் அண்மைக்காலமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஓசூரில் ஆர்தர் எனர்ஜி மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏராளமானோர் தற்போது மின்சார வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
சென்னை ஐஐடி-யில் மின்சார வாகனங்கள் குறித்த பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 25 மாணவர்களை மின் வாகன படிப்பில் இணைக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. இளங்கலை பிடெக் பயிலும் மாணவர்கள் தங்களது 3-ஆம் ஆண்டு பட்டப்படிப்பின் இறுதியில் மின்சார வாகனங்கள் குறித்து 2 ஆண்டுகளை பிரிவில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இணைந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு பட்டங்கள் சேர்ந்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் இந்த மாதம் முதல் மின்சார வாகனங்கள் குறித்த இந்த பாடப்பிரிவில் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று அது தெரிவித்துள்ளது.