ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கு முன் பாதுகாப்புக் கருதி அங்கு இணையசேவை, தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டு, முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்தச் சூழலில், ஜனவரி 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19இன் படி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவது அடிப்படை உரிமைகளில் சேரும் என்பதால் ஜம்மு காஷ்மீரில் முடக்கிய சேவையைத் தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி காஷ்மீரிலுள்ள சில மாவட்டங்களில் மீண்டும் இணையசேவை தொடங்கப்பட்டு, விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவருகின்றன. இருப்பினும், பட்காம், காந்தர்பால், ஸ்ரீநகர், குல்கம், அனந்த்நாக், ஷோபியன், புல்வாமா ஆகிய பகுதிகளில் இணையசேவை இன்னும் தொடங்கப்படவில்லை.
காஷ்மீரில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்பட்டதை அடுத்து மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி, பியூஸ் கோயல் ஆகியோர் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதால் அங்குள்ள மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்குவதற்காக காஷ்மீருக்குப் பயணம் சென்றுள்ளனர். பயணத்தின் முதல் நாளான நேற்று, ரீசி மாவட்டத்திலுள்ள மூரி கிராமத்தில் அமைக்கப்படவுள்ள நடை மேம்பாலம், நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், “யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் காஷ்மீர் புதிய பாதையில் பயணிக்கவுள்ளது. அந்தப் பயணம் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும் என்பதை மக்களுக்கு உறுதியளிக்கிறோம். காஷ்மீரில் ஐஐஎம், ஐஐடி ஆகிய கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். அது விரைவில் நிறைவேறும்” எனக் கூறினார்.