மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
14 வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வந்தது. ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த, பிசிசிஐ தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்து ,பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா கூறும்போது, இந்தியாவில் செப்டம்பர் ,அக்டோபர் மாதங்களில் பருவமழை காலம் தொடங்கும் என்பதால் ,அப்போது ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாது. இதன் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தோம் என்று அவர் கூறினார்.கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ,கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது .